காந்தியம்

 

மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில்
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்….
உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்!
– இசை

எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழி

ஒரு பொட்டு தெரித்தாலே
உடல் கொப்புளமாய் பொந்திப் போகையில்
எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழியில்
மனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்
ஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்
நன்மார்க்கத்தின் வழியில்
காற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிலரும்
ஏன் இங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
தவிரவும்,  அடிக்கடி ஏன் அவர்கள் சலவாய் வடிக்கிறார்கள்.
வாணியிடம் ஆசிபெற்ற கையோடு
உற்சாகமாய் வந்து
இந்த நெரிசலில் கலக்கிறான் ஒரு கவி.
அவன் தொப்பி எதுவும் அணிந்திருக்கவில்லை
மேலும்
அனைவரையும் தொப்பியைக் கழற்றிவிடும் படியும்
கேட்டுக் கொள்கிறான்.
எட்டுமுழ வேட்டியை தலைக்கு போர்த்தியிருக்கும்
சிவனாண்டியைப் பார்கையில்
நமக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.
உளுந்துவடைகள்
எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே ?

–  இசை

நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை

 

உன் குளத்து பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்
அதுவும்  இல்லையென்றான  நாளில் தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லா குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
” ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்”
என்று கத்தினேன்.

– இசை

ஒரே நாளில்

 

நீ என் காதலை மறுத்த
அதே நாள் மாலை
எங்கள் தெரு சலவைக்கடை
இடம் மாறி
வெகு தொலைவுக்குச் சென்றது.
இப்படி
ஒரே நாளில்
எல்லோரும் என்னைக்
கை விட்டால் எப்படி?

– முகுந்த் நாகராஜன்

மூன்றாமவன்


தன் வகுப்பு மாணவர்களின்
எண்ணிக்கை,
பத்தாவது பொதுத்தேர்வு எண்,
மொத்த மதிப்பெண்,
போக்குவரத்துச் சந்திப்பில்
முன்னால் நிற்கும் வாகனத்தின்
பதிவு எண்,
வங்கிக் கணக்கு எண்,
முன்பதிவுசெய்த 
ரயில் வண்டி இருக்கை எண்,
கிரேக்க நாட்டின்
மொத்தக் கடன் தொகை,
வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை,
நாட்டில் உள்ள
பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை,
நகரின் வெப்பநிலை,
இதுவரை எண்ணிய அலைகளின்
எண்ணிக்கை
என
எந்த எண்ணைப் பார்த்தாலும்
மூன்றால் வகுபடுகிறதா என்று
சோதித்துப்பார்த்துவிடுகிறான்,
மூன்று பிள்ளைகளில்
ஒருவனாகப் பிறந்தவன்.

- முகுந்த் நாகராஜன்