அவ்வளவுதான்

பாத்ரூமென்றால் அப்படித்தான்
எப்படி கழுவினாலும் அழுக்கு நீங்காது
எவ்வளவு நறுமணமூட்டினாலும்
நாற்றம் போகாது

 
சோப்பென்றால் அப்படித்தான்
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
கைகளில் நிற்காது


நாமென்றால் அப்படித்தான்


நழுவி கீழே விழுந்து விட்டால்
எடுத்து
ஐந்துவிநாடிகள் ஓடும்நீரில் காட்டிவிட்டு
தொடர்ந்து தேய்க்க வேண்டியதுதான்

–  இசை

Advertisements

​உள்ளே வெளியே

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச் சொல்லி
கண்ணாடியைத் தட்டுகிறான்
சிறுவன்.
-முகுந்த் நாகராஜன்

பூரண மகிழ்ச்சி

 

கட்டக்கடைசியில் நான் உறுதிபூண்டு விட்டேன்
வாழ்வில்
இனி மகிழ்ச்சி மட்டும்தான் என்று.

கிடார் வாசிக்க
கிடார் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

புகைக்க நெருப்பு கட்டாயமில்லை

நாபிக்கமலத்தை நுனிநாக்கால் வருடுவதற்கு
நாபிக்கமலமோ நுனிநாக்கோ
அவசியமில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

மலையுச்சியில் நிலவொளியில் கிடக்க
மலையேற வேண்டியதில்லை.

புனலாட வேண்டும் என்று தோன்றிவிட்டால்
உடனே
ஆடைகளை களைந்து விட வேண்டியதுதான்
கடல்நீர் ஆவியாகி
பிறகு மேகமாகி
எப்போது அது மாரியாகி
எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?

நான் உறுதிபூண்டு  விட்டேன்
இனி
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!

– இசை

அறிவச்சம்

 

மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில்
தன்னிச்சையாக
மொட்டை மாடிக்குப் போனான்
கருநீல வானத்தில் கரைந்து நின்றான்
குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்
நட்சத்திரங்களில் மினுமினுத்தான்
அவள் வீட்டில் இருக்கையில்
இவ்வளவு பெரிய வானம்
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி  ஜொலிக்கும் நிலவு
இவையெல்லாம்
எங்கே ஒளிந்து கொள்கின்றன
என்று
ஒரே ஒரு கணம் யோசித்தான்.
மறுகணம்
அஞ்சி நடுங்கி
” miss u” என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
– இசை

இப்பிறப்பு

 

எவன் குவளை நீரை தட்டிவிட்டேன்
எவன் குடிசைக்கு தீ வைத்தேன்
எந்த தெய்வத்தை நிந்தித்தேன்
எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன்
எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன்
எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன்
எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன்
எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன்
எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன்
எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்
எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன்
எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.

 

– இசை

பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்

 

“ மன்னித்துக்கொள்ளுங்கள் “
என்பது போல
என் உடைந்த ரிமோட்டை
அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
ஒரு குண்டு வெடித்தது போல
அது சிதறியிருந்தது.

இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,
”மன்னித்தோம்” என்பது போல
புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
”எப்படியென்றே தெரியவில்லை…
பீரோ மேலிருந்து
தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
என்று சொன்னேன்.
அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
தன் சிதைந்த உருவின் வழியே
ரகசியமாக சொல்லி வைக்கின்றன.

மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
என்பதை அறிந்து கொள்ள
மலைவெளிக்குள் நுழைந்து
குகை வழிக்குள் புகுந்து
ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?
நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்…
அவர் சொல்வார் ஆயிரம்.

 

– இசை

மகாகாரியம் மகாகாவியம்

மழை பெய்து
நீலம் கனிந்த
விண்ணின் கீழ்
மழை பெய்து
பச்சை விரிந்த
மண்ணின் மேல்
புள்ளி புள்ளி
இரத்தத் துளிகளாய்
விரைகின்றன விரைகின்றன
பட்டுப் பூச்சிகள்
எங்கோ ஏதோ
ஓர் அழகியல் பிரச்னையை
அவசரமாய்த் தீர்க்க
 
நானும்! நானும்!
 
ஒளிரும் விசும்பின் கீழ்
நானும்! என மிழற்றியது
புள்ளினங்கள் சிறகடிக்க
பாடும் பசும் பொன்வெளி.
நானும்! நானும்! எனத்
தானும் மிழற்றியது
ஒரு துண்டுத் தீனியும்
ஒரு குவளைத் தேனீருமாய்
ஆங்கொரு தேனீர்க்கடை!
மூன்றாவது மாடியின்கீழ்
 
இந்த மின்விளக்குக் கோலம்
அம்மா, உன் கழுத்துமணி ஆரம்-எனப்
பொங்கியதோர் நெஞ்சின் கீழே
மனிதர்கள் ஓராயிரம் மதலைகள்.
தலைக்கு மேலே விண்மீன் வைரங்கள் கோடித் தூசுகளாக
நடக்கும் இரு கால்கள்
 
 
– தேவதேவன் 

நினைவில் வீடுள்ள மனிதன்

 

நினைவில் வீடுள்ள மனிதன்
மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான்.
கிளம்புகையில்
தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்
கப்பலில் ஏற்றுகிறான்
பாவம், அது தள்ளாடுகிறது

சென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.
சொல்பேச்சு கேளாமல்
அதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்
ஒரு லாரிச்சக்கரத்தில் சிக்கி
உருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.

நினைவில் வீடுள்ள மனிதன்
பூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே
காண்கிறான்

நினைவில் வீடுள்ள மனிதனுக்கு
இருபத்தியேழாம் வாய்ப்பாடு
மனப்பாடமாக தெரிந்திருக்கிறது

நினைவில் வீடுள்ள மனிதனின்
கேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது
அவன் அலுவலகம் போனதும்
அது “ டும்” என்று வெடிக்கிறது.

நினைவில் வீடுள்ள மனிதனின்
தலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது
அவனது நெஞ்சத்தில்
ஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

நினைவில் வீடுள்ள மனிதன்
கடல் வழியே போய்
கடல் வழியே திரும்பினானென்றாலும்
துளிநீலமும் கண்டானில்லை.

– இசை

விடுமுறை மேகம்

உச்சந்தலைக்கு நேர் மேலே துண்டு மேகம்
நான் கேட்கிறேன் அது எவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கும்
ஆனால் அதன் முகத்தில் துளியும் களைப்பில்லை
அது இப்போதுதான் நீலவிரிப்பை உதறிக் கண்விழித்திருக்கும்
என் மனமதைக் கைகளில் அள்ளிப்பார்க்கிறது பிஞ்சுக்குழந்தை மாதிரி
கடவுளே, அதனிடம் ஒரு ரகசியமும் இல்லை
சில மாதங்களாக நான் இப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஆயினும் இத்தனை நாள் இது எங்கிருந்தது யாரது தலைக்குமேல் நின்றிருந்தது
துயரமோ அதற்கு முதுகே இல்லையே
அதன் அசைவில் சற்றும் பதற்றமில்லை, எழுந்ததும்
கண்களைக் கசக்கிகொண்டே ஒன்றுக்கிருந்துவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொள்ளும்
சிறுவனென, இன்று விடுமுறையாகத்தான் இருக்கவேண்டும்
திடீரென அதனுள்ளிருந்து ஒரு சாம்பல் முயல் மூக்கை நுழைக்கிறது
கணத்தில் அது தன் விடைத்த காதுகளை அறுத்துக்கொள்கிறது
பாடலால் நிரம்பிய மனிதனொருவன் செய்ததைப் போல
பின்னர் ஒரு பாறைமேல் ஏறியமர்கிறது அதனடியில் பனிக்கரடி உறங்குகிறது
பாறையிடுக்கினின்று நாநீட்டிய மலைப்பாம்பு பின்புறமாகச் சென்று
               முயலை விழுங்குகிறது
பின் அந்தக் கரடியை
பின் அந்தப் பாறையை. அங்கே ஒரு
பசியுமில்லை ஓலமுமில்லை
முழுக்காட்டையும் விழுங்கிவிட்ட அது இங்கிருந்து பார்ப்பதற்கு
யானை போல் தெரிகிறது.
இறுதியாக அந்த யானை தொப்பியை அணிந்தபடி மெதுமெதுவாக
               மிதந்து செல்கிறது
விரிந்துகிடக்கும் ஒரு நிலத்தையும் ஜோடிக் கண்களையும் விட்டுவிட்டு ஒரு
விளையாட்டு மைதானத்திற்கு
– சபரிநாதன்

காந்தியம்

 

மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில்
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்….
உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்!
– இசை