இந்த நவம்பர்தான் மருந்துகளை அடுக்கிவைக்கும் இடத்தில் செத்துக்கிடக்கும் சின்னஞ்சிறு பூச்சியைக் எனக்குக் காண்பித்தது மேலும் இதே நவம்பர்தான் மறைந்திருப்பவற்றுக்கு அருகில் என்னைக் கொண்டு வந்தது அவ்வளவு கிட்டத்தில் இருந்ததால் சிராய்ப்புகளுக்கு அஞ்சி பெரும்பாலும் இசை கேட்பதில் பொழுதுகளைச் செலவிட்டேன் மறுபடியும் எனக்கு நம்பிக்கை வந்தது ஆம், பிசாசுகளும் இசையினுள் வசிக்கின்றன என்று. ஆழத்தில், கைரேகையைக்கூடச் சுழற்பாதையென மாற்றும் வெறுப்பை உணர்கையில் ஒருவர் பதுங்குமிடங்களைப் புனைந்தாக வேண்டும்— தன்னிலிருந்து ஒளிந்து கொள்வதற்காகவேனும். இல்லையெனின் இவ்விதம்தான் தனது சொந்த மண்டைக்குள் நிறுவ நேரிடும் சித்திரவதைக்கூடங்களை, விந்துநெடியடிக்கும் படுக்கையறைகளை.. ஏதோவொன்றை எதிர்த்தபடி திடீர் திடீரென விழிவிரிய நடந்தேன் (கனவிலும்கூட நடந்தேன்) பசுமையை மினுக்கி மினுக்கிக்காட்டும் இப்புல்வெளி அப்படியே விழுங்கியிருக்கக்கூடும் ஒருவனை. நதியின் ஓட்டத்தில் சதித்திட்டங்களின் சாயைகள். காற்று பலத்து வீசுகையில் செவிகளில் காலத்தின் ஊளை. எண்ணங்கள். நினைவழுத்த தாழ்வுமண்டலங்கள். இருண்ட எண்ணங்கள். பற்கடிப்புடன் வெறித்துப்பார்த்தேன் மரங்களின் பேரரசை வலசைப் பறவைகளை மலர்களை. பிறிதொரு சமயத்தில் குட்டி விலங்குகளின் விழிகளில் கரிய புகையில் எனது நிழலில் என வழிநெடுகிலும் உன்னையே கண்டேன்— அழகிற்கும் பயங்கரத்திற்கும் ஒரே எடை என்பதற்கான அத்தாட்சி. ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை எதற்கெதற்கோ பொறுப்பேற்றுக் குற்றவுணர்ச்சி கொண்டேன். மழைப்பொழுதுகளில் கைவசமிருந்த தன்வரலாற்று நூல்களினூடே உலவும்போது எவ்வளவு கழிவிரக்கம் முடிவேயில்லாதது போல். ஒவ்வொரு மழைத்துளியையும் விழுதாக்கி அவ்விழுதுகளை நூந்நூறு மந்திக்கூட்டங்களெனப் பற்றித் தாவித் தாவி எதையோ சூறையாடச் சென்றேன் காரணமேயிலாது. சாயங்காலங்களில் அண்ணாந்து அண்ணாந்து பார்த்தேன், பழக்கத்தின் கொத்தடிமையாக. பிறகு முகில் தீற்றல்களைப் புகைப்படமெடுத்து வெறித்தேன் அது ஏதோ கிணறு என்பது போல. அப்புறம் அவநம்பிக்கையின் வெளிச்சத்தில் என்னை நோக்கினேன்: உள்ளே உறங்கயியலாது அரற்றும் கண்காணா காயங்கள் ஒவ்வொன்றும் துக்கத்துக்கு ஏங்கும் விண்ணலை ஏற்பிகள் எங்கெங்கிருந்தோ பெறுகின்றன, எங்கெங்கோ அனுப்புகின்றன. ஏதேதோ ரகசியப் பரிமாற்றங்கள்— ஒன்றைக்கூட அறியவியலாது அல்லது ஒவ்வொன்றும் வேண்டுதல் சொற்களுடன் பாட்டிலில் வைத்து ஆழியில் வீசப்பட்ட காகிதங்கள் அவ்வளவும் தத்தளிப்பில்.. கடைவீதியினுள் நுழைகிறேன் நியான் விளக்குகள் வரவேற்கின்றன என்னை இங்கு எல்லாவற்றைக் குறித்தும் குறை கூறலாம் அல்லது எதைப் பற்றியும் கூறயியலாது. அவ்வளவு உள்ளது அடக்கிவைக்கப்பட்ட வெறுப்பு. பார்த்து போடா நாயே... எதை எடுத்தாலும் இருபது ரூபாய்.. அதாவது வசைச்சொற்களின் திருவிழா நான் திட்டுகிறேன் வேறொன்றை. அவ்வளவு பேரும் வேகத்தில். ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள் இன்னும் சற்று நேரத்தில் உலகம் அழியப் போகிறது என்று. சாலைக்குழிகளில் சேற்று நீர், நின்று முகம் பார்க்கிறேன். பிறகு உறக்கமற்ற ஒரு நள்ளிரவு. கணினித்திரையின் முன்னிருக்கிறேன். இணைய உலாவியின் ஒரு கீற்றில் நீலப்படம்; இன்னொன்றில் விவிலியம். யோபுவைப் போல நானும் சொல்கிறேன் அழிவைப் பார்த்து நீ எனக்குத் தகப்பன் என்று. மறுபக்கத்திலோ இச்சையின் மெய்நிகர் நாடகங்கள், ஈரம் தேடும் வேர்களின் பீதிக்கனவுகள். எனது வெறுப்பினும் பிரம்மாண்டமான ஒன்றை காண வேண்டி கட்டக்கடைசியில் கறுப்பு ஓவியங்களிடம் வருகிறேன். இவ் ஓவியங்களை வரையத் தூண்டியது எது யார் அறிய இயலும் திட்டவட்டமாக? எவ்வளவோ கருதுகோள்கள் புத்தகங்களில். ஆயினும் அத்தனைக்கும் அப்பாலிருந்தது அந்த ரகசியம், வகுப்புக்கு வெளியில் முழங்காலிட்டிருக்கும் சிறுவனைப் போல. கறுப்பு நிறம் மகாராஜாவாக, பேய்களோ சுதந்திரமாக. ஓ மர்மங்களே நீங்கள் நீடூழி வாழ்வீர்களாக.. நிராசையின் பால்யகாலப் புகைப்படம், வெறுப்பின் ரோஜா, நர மாமிசம், விகார விழிகள், தேற்றயியலாத கதாபாத்திரங்கள், தீவினையின் வெறிச்சிடல்கள், கறுத்தச் செம்மறியாடுகள், சுண்டக்காய்ச்சப்பட்ட அச்சம், சித்தக் கலக்கம், அதன் முந்தைய கணத்துத் தரிசனங்கள். இவற்றுக்கு மத்தியில் நிழலினும் இளைத்த ஒரு நடுங்கும் நான். சன்னலினூடே குளிர்க்காற்று. இழுத்துச் சார்த்துகிறேன் அதை. அறை மாத்திரமல்ல யாவும் இருளில். களைப்பில். கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறேன் எதிர்பாராமையினுள். யாரோ நீட்டிய அபயக்கரம் போல எனக்கான விடுதலைக் கடிதத்தை ஏந்தி வந்திருக்கும் தூதுவன் போல ஒரு மின்மினி— அது சின்னஞ்சிறு கலங்கரைவிளக்கம்,சிறகசைக்கும் வெம்மையிலாச் சுடர். அதனிடம் பயமுமில்லை வெறுப்புமில்லை மின்னற்பொழிவுகளில் காதலில் இலங்கும் அதே பிரகாசம் நான் அறியேன் காஃபி போட்டுத்தந்தால் அருந்துமா விடியும்வரை என்னருகிலேயே அமர்ந்திருக்குமா இந்தக்கணம் அரிது; கிட்டத்தட்ட காலத்துக்கு வெளியே. ஒரு பிரார்த்தனை போல நான் காண்கிறேன் தனது குட்டியூண்டு வெளிச்சத்தால் அத்துணை ஆசையோடு ஒவ்வொரு இடமாக ஒளிரச்செய்வதை. பிறகு பைய எழுந்து அறையினுள்ளாகவே நானதை பின்தொடர்கிறேன். நள்ளிரவு. சுவரில் காற்று அறையும் சப்தம். சித்தரவதைகூடத்தினுள் விளக்கு அணைக்கப்படுகிறது… (றாம் சந்தோஷிற்கு) வே.நி.சூர்யா
ஊரடங்கு – 4
நமது மாலை நேரத் தேநீர்களின் தலையில்
இடி விழுந்துவிட்டது.
அது
ஒரு நாளின் அழகான நிறுத்தம்
வீடொடுங்கும் முன்னே
உலகத்தை ஒரு முறை சுற்றி வருவது
சமயங்களில்
அது ஓய்வின் இனிமை
ஒரு தடகளவீரன் தனது நெடிய பயிற்சிகளின் முடிவில்
ஊற்றெடுத்து வரும் வியர்வைப் பெருக்கை
வழித்தெறிந்து சிரிக்கும் சிரிப்பு
வானத்தின் ஜாலங்களைப் பார்த்தபடியே
டம்ளரில் வாய்வைத்து
அந்தியை உறிஞ்சுவேன்.
அந்தியை உண்டவன்
அவ்வளவு சீக்கிரம் இருண்டு விடுவதில்லை.
வானத்தின் கீழ் செய்யப்படும்
எந்தவொரு காரியத்திலும்
வானமும் கொஞ்சம் கலந்துவிடுகிறது.
வீடுகளில்
தரமான முறையில் தயாரிக்கப்படும்
சுவைமிகு தேநீரில்
வானம் இருப்பதில்லை.
__ இசை
ஜிம்மிக்கு எசமானர் உரைத்தது
வாயும் குறியும் போதும்
நீ மகிழ்வுற்றிருக்க
போதாது என்று
கொஞ்சம் செல்லத்தைக் கோரிச் சிணுங்குகிறாய்.
அங்குதான் துவங்குகிறது
எல்லாக் கலவரங்களும்.
– இசை
அவ்வளவுதான்
பாத்ரூமென்றால் அப்படித்தான்
எப்படி கழுவினாலும் அழுக்கு நீங்காது
எவ்வளவு நறுமணமூட்டினாலும்
நாற்றம் போகாது
சோப்பென்றால் அப்படித்தான்
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
கைகளில் நிற்காது
நாமென்றால் அப்படித்தான்
நழுவி கீழே விழுந்து விட்டால்
எடுத்து
ஐந்துவிநாடிகள் ஓடும்நீரில் காட்டிவிட்டு
தொடர்ந்து தேய்க்க வேண்டியதுதான்
– இசை
உள்ளே வெளியே
பூரண மகிழ்ச்சி
கட்டக்கடைசியில் நான் உறுதிபூண்டு விட்டேன்
வாழ்வில்
இனி மகிழ்ச்சி மட்டும்தான் என்று.
கிடார் வாசிக்க
கிடார் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
புகைக்க நெருப்பு கட்டாயமில்லை
நாபிக்கமலத்தை நுனிநாக்கால் வருடுவதற்கு
நாபிக்கமலமோ நுனிநாக்கோ
அவசியமில்லை என்பதை அறிந்துகொண்டேன்.
மலையுச்சியில் நிலவொளியில் கிடக்க
மலையேற வேண்டியதில்லை.
புனலாட வேண்டும் என்று தோன்றிவிட்டால்
உடனே
ஆடைகளை களைந்து விட வேண்டியதுதான்
கடல்நீர் ஆவியாகி
பிறகு மேகமாகி
எப்போது அது மாரியாகி
எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?
நான் உறுதிபூண்டு விட்டேன்
இனி
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!
– இசை
அறிவச்சம்
இப்பிறப்பு
எவன் குவளை நீரை தட்டிவிட்டேன்
எவன் குடிசைக்கு தீ வைத்தேன்
எந்த தெய்வத்தை நிந்தித்தேன்
எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன்
எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன்
எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன்
எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன்
எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன்
எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன்
எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்
எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன்
எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.
– இசை
பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்
“ மன்னித்துக்கொள்ளுங்கள் “
என்பது போல
என் உடைந்த ரிமோட்டை
அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
ஒரு குண்டு வெடித்தது போல
அது சிதறியிருந்தது.
இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,
”மன்னித்தோம்” என்பது போல
புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
”எப்படியென்றே தெரியவில்லை…
பீரோ மேலிருந்து
தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
என்று சொன்னேன்.
அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
தன் சிதைந்த உருவின் வழியே
ரகசியமாக சொல்லி வைக்கின்றன.
மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
என்பதை அறிந்து கொள்ள
மலைவெளிக்குள் நுழைந்து
குகை வழிக்குள் புகுந்து
ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?
நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்…
அவர் சொல்வார் ஆயிரம்.
– இசை